Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மக்களின் முன்னணிப் படையாக இருங்கள்,அவர்களுக்குப் பின்னால் பதுங்குதல் கூடாது.-தோழர் தியாகு


srilankan election 2015

தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவு பற்றி தோழர் தியாகு அவர்கள் எழுதியவை முழுமையாக கீழே.

மாற்றுக் கருத்துச் சொல்வோர்க்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியான விவாதமுறை ஆகாது.

கொடியவன் ராசபட்சேயை தமிழ் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதும், இந்த வெறுப்பைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு பிரதிபலிக்கிறது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.

தேர்தல் என்றால் ஆய்ந்து முடிவெடுத்தல் என்று பொருள். ஆத்திரத்தில் முடிவெடுப்பது தேர்தல் எனப்படாது.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்
என்றார் திருவள்ளுவர். மக்களின் உணர்வுகளை உள்வாங்கி அதே போது அவர்களின் அடிப்படை நலனுக்கு உகந்த முடிவைத் தொலைநோக்குப் பார்வையுடன் எடுப்பதுதான் அரசியல் தலைமையின் வேலை. தலைமை என்பது மக்களுக்குத் தலையாக இருக்க வேண்டுமே தவிர வாலாகி விடக் கூடாது.

“விமர்சனம் செய்பவர்கள், மற்றும் கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களைப் பார்த்தோமானால் அரசுக்கு விசுவாசமானவர்கள் மற்றும் இந்த அரசை எப்படியாவது வெற்றியடைய வைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிகின்றது” என்று கூறுகின்றீர்கள். இது கடுமையான குற்றச்சாட்டு. உங்களால் இதை மெய்ப்பிக்க முடியுமா? அனந்தி சசிதரனும், மறவன்புலவு சச்சிதானந்தனும், சிவகரனும் அரசுக்கு விசுவாசமானவர்களா? இந்த அரசை எப்படியாவது வெற்றியடைய வைக்கும் முயற்சியில் இருப்பவர்களா?

உருத்திரகுமாரனும் அருள்தந்தை இமானுவேலும் வேறு பலரும் ததேகூ முடிவை ஆதரிக்கவில்லை என்பதாலேயே அவர்கள் எல்லாம் அரசுக்கு விசுவாசமானவர்கள் என்பீர்களா? த.தே.கூ தலைவர்கள் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் எடுத்துள்ள முடிவு தவறானது என்று காரண காரியத்தோடு வாதிட விரும்புகிறேனே தவிர, அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து, எங்கோ பெட்டி வாங்கி விட்டார்கள் என்று பழிதூற்ற நான் உடன்பட மாட்டேன்.

வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்: த.தே.கூ தலைமை மைத்திரிபால சிறிசேனாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருப்பதன் மூலம் சிங்களப் பேரினவாதத்தை உசுப்பி விட்டு சிங்கள மக்கள் ராசபட்சேக்கு வாக்குகளை அள்ளிப்போட வழிகோலியுள்ளது, இவ்விதம் ராசபட்சேயின் வெற்றிக்கு உதவியுள்ளது. ஆனால் இப்படிச் சொல்வது ததேகூ தலைவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது ஆகாது. அவர்களது தவறான முடிவின் விளைவைச் சுட்டி, அது எப்படி அவர்களது நோக்கத்துக்கும் மக்கள் விருப்பத்தும் எதிராக அமைகிறது என்பதை உணர்த்துவதே ஆகும்.

நீங்கள் செய்வதுபோல் உள்நோக்கம் கற்பித்து வாதிடுவதுதான் தமிழ்த் தலைவர்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர் துரோகி என்று தூற்றி எதிர்காலத்தில் ஒன்றுபடுவதற்குள்ள வாய்ப்புகளை அடியோடு சிதைத்து விடும். என்னைப் பொறுத்த வரை திரு சம்பந்தனின் இப்போதைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தவிர அவரின் உழைப்பையோ ஆற்றலையோ கேள்விக்குள்ளாக்க மாட்டேன். இயன்றால் உடன்படுவோம், இயலாதென்றால் வேறுபடுவதற்கு உடன்படுவோம் என்பதுதான் சனநாயக அணுகுமுறை. என்னை ஆதரிக்காதவர்கள் எல்லாம் என் பகைவர்கள் என்பது புஷ், ராசபட்சே போன்றவர்களின் சர்வாதிகார அணுகுமுறை. நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தில் சனநாயக அணுகுமுறைதான் பயனுள்ளது எனக் கருதுகிறேன்.

இந்தத் தேர்தலோடு உலகமோ இலங்கையோ மூழ்கிப் போய் விடப் போவதில்லை. சிங்கள ஆதிக்கமோ தமிழீழ விடுதலைப் போராட்டமோ முடிந்து விடப் போவதில்லை. இன்று வேறுபட்டு நிற்பவர்கள் நாளை ஒன்றுபட வேண்டிய தேவை வரும். இந்தப் பொறுப்புணர்வோடு நிதானத்துடன் விவாதிப்பது நன்று.

த.தே.கூ தலைமையின் தவறான முடிவை நியாயப் படுத்துவதற்காக நீங்கள் தந்தை செல்வாவையும் தலைவர் பிரபாகரனையும் துணைக்கழைக்கின்றீர்கள். திரு சம்பந்தன் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்கிறாரே, அதுவும் செல்வா வழி, பிரபா வழிதானா? ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றுவது எப்படி என்று அவரே வழிசொல்லட்டும். இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தின் படி தனிநாடு கேட்பவர்கள் தேர்தலில் நிற்க முடியாதுதான். திரு சம்பந்தன் தனிநாடு கேட்க வேண்டாம், ஆறாம் திருத்தத்தை நீக்கும் படிக் கேட்கலாமே, அதில் என்ன இடர்ப்பாடு? பதினேழாம் திருத்தம், பதினெட்டாம் திருத்தம் பற்றியெல்லாம் பேசுகிறவர் ஆறாம் திருத்தத்தைப் பற்றிப் பேசவே காணோமே! 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 பொதுத்தேர்தல், 1983 கறுப்பு யூலை, 2004 பொதுத்தேர்தல், 2009 இனவழிப்பு… எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு 1972க்குத் திரு சம்பந்தன் திரும்பிச் செல்ல விரும்புவதும் செல்வா வழி பிரபா வழிதானா?

போராட்டத்தில் ஏற்படும் இழப்புகளால் சோர்வுற்று மக்களே விடுதலை வேண்டாம் என்று சொல்லும் கட்டங்கள் வரலாம், அப்போதும் கூட விடுதலைக் குறிக்கோளைக் கைவிடாது பாதுகாத்து மக்களுக்கு ஊக்கமூட்டி விடுதலைப் போராட்டத்துக்கு அணிதிரட்டும் கடமை தலைமைக்கு உள்ளது. மக்களின் முன்னணிப் படையாக இயக்கம் செயல்பட வேண்டுமே தவிர அவர்களுக்குப் பின்னால் பதுங்குதல் கூடாது. இப்படிப் பதுங்குவதுதான் அரசதந்திரம் என்றால் அது நமக்குத் தேவை இல்லை.

ஆட்சி மாற்றம், ஆட்சி மாற்றம் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். இலங்கையில் இதற்கு முன் ஆட்சி மாற்றமே நடந்தது இல்லையா? முந்தைய ஆட்சி மாற்றங்களால் தமிழ்த் தேசிய இனத்திற்கு என்ன கிடைத்தது? இது வரை கிடைக்காதது இப்போது எப்படிக்கிடைக்கப் போகிறது? வரலாற்றின் படிப்பினைகளை மக்கள் அவசர ஆத்திரத்தில் மறக்கலாம், உங்களைப் போன்றவர்கள் மறக்கலாமா? அவர்களுக்கு நினைவூட்டுவது தலைமையின் கடமை அல்லவா? தமிழர்களுக்குத் தேவை ஆட்சி மாற்றமா, அரசு மாற்றமா? ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் ஆட்சி மாறுவதாலோ, ஆட்சி வடிவம் (அதிபர் ஆட்சி முறையிலிருந்து நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு) மாறுவதாலோ தமிழர்களுக்கான சனநாயகம் எப்படி மலரும்? இவ்வகையில் மக்களுக்கு மயக்கம் இருக்குமானால் அதைப் போக்க வேண்டிய தலைவர்களே மயக்கம் விதைப்பவர்களாகச் செயல்படலாமா?

ராசபட்சே ஆட்சி போய் சிறிசேனா ஆட்சி வந்தால் தமிழர்களுக்கு உருப்படியாக என்ன கிடைக்கும்? இது குறித்து ததேகூ தலைமை சிறிசேனாவுடன் உடன்பாடு ஏதும் செய்துள்ளதா? உறுதி ஏதும் பெற்றுள்ளதா? அப்படி எதுவும் இல்லை என்றால் தமிழ் வாக்குகளை விலைபேசாமலே விற்று விட்டதா? இது தமிழினத்தை அயலவன் கையில் தாரைவார்த்துக் கொடுப்பதாகாதா? தந்தை செல்வாவோ தலைவர் பிராபகரனோ இப்படி எப்போதாவது செய்ததுண்டா? இப்போது நிலைமை வேறு என்று சொல்வீர்களானால், செல்வா, பிரபா பெயர்களைத் துணைக்கழைப்பதை நிறுத்துங்கள்.

சிறிசேனா ஆட்சிக்கு வந்தால் இன்னின்னது கிடைக்குமென்பதற்கு ஆதாரம் கொடுங்கள். ராசபட்சே ஆட்சி தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்கிறீர்கள், சரி! சிறிசேனா ஆட்சி அப்படிச் செயல்படாது என்கிறீர்களா? சிறிசேனா ஒருவராவது ‘தமிழர்கள் தொடர்பாக ராசபட்சே கொள்கை வேறு என் கொள்கை வேறு’ என்று அறிவித்திருக்கிறாரா? இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றால், இவரைவிட அவர் மேல் என்று சொல்வது மக்களை ஏமாற்றுவதாகாதா? இந்த இருவரையும் இரண்டு தனிமனிதர்களாகப் பார்ப்பதா? அல்லது ஒரே சிங்களப் பேரினவாத இனக்கொலை அரசியலின் இரட்டை ஆளுருவங்களாகப் பார்ப்பதா? ஏமாறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு, ஆனால் ஏமாற்றும் உரிமை எந்தத் தலைமைக்கும் இல்லை.

“மைத்திரி சிங்கள மக்களையும் சிங்களக் கடும்போக்காளர்களையும் மீறி தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார் என்பது வேறு கதை” என்று இப்போதே சொல்கிறீர்கள்.

எதுவும் செய்ய மாட்டார் என்றால் அவரை ஏன் ஆதரிக்க வேண்டும்? இரண்டாவதாக, மைத்திரி தாமே ஒரு சிங்களக் கடும்போக்காளர் என்று உங்களுக்குத் தெரியாதா? அதற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லையா? அவர் செய்ய விரும்புவார் என்பது போலவும், சிங்களக் கடும்போக்காளர்கள்தான் கையைப் பிடித்து இழுக்கப் போகிறார்கள் என்பது போலவும் படங்காட்ட வேண்டிய தேவை என்ன?

நல்லது நடக்கும் என்று போலிச் சாமியார்கள் போல் ஆசி வழங்கிக் கொண்டிருக்காமல், தமிழ் மக்களுக்கு எது நல்லது, அது எப்படி நடக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்லுங்கள்.

நீங்கள் சொல்கிறீர்கள்:

“மிகவும் மோசமான யுத்தத்தினால் இடம் பெயர்ந்துள்ள லட்சக் கணக்கான தமிழ் மக்கள் இன்னும் மீள்குடியேறற்ம் செய்யப்படவில்லை, வீடுகள் வாழ்வாதாரங்கள் இன்னும் செய்யப்படவில்லை.

“மக்களின் காணிகள் இன்னும் இராணுவப் பிடியில் உள்ளது. வடக்கில் இன்னும் இராணுவச் சோதனைச் சாவடிகள், இராணுவச் சோதனைகள் தீரவில்லை.வடக்கு வாழ் மக்களை இந்த அரசு தனது இராணுவப் பிடிக்கள் வைத்துக் கொண்டு இராணுவ ஆட்சி நடத்துகின்றது.

“யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டள்ளதாக அரசு சொன்னாலும் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை இன்னும் இந்த அரசு முடிக்கவில்லை.”

இந்தக் கொடுமைக்கு சிறிசேனா பொறுப்பில்லை எனக் கருதுகிறீர்களா? பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் இனக் கொலைக் குற்றவாளியாக ராசபட்சேயுடன் கூட நிறுத்தப்பட வேண்டியவர் அல்லவா அவர்? தன் குற்றப் பொறுப்புக்காக அவர் இதுவரை தமிழ் மக்களிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுள்ளாரா? அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ததேகூ தலைவர்கள் கேட்டதுண்டா? பன்னாட்டுப் புலனாய்வின் முடிவில் சிறிசேனாவும் குற்றவாளி என்று காணப்பட்டால் ததேகூ தலைமை என்ன செய்யும்?

“இராஜதந்திரம் என்பது மக்களை அடகு வைப்பதல்ல” என்று நீங்கள் சொல்வதுதான் சரியானது. ஆனால் ததேகூ தலைமை தமிழ் மக்களை சிறிசேனா-சந்திரிகா-ரணில்-பொன்சேகா கும்பலிடம் அடகு வைப்பதை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது? நிபந்தனையற்ற ஆதரவை அடகு வைப்பது என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிப்பது?

“யுத்தம் முடிந்த பின்னரும் இலங்கையின் உண்மை நிலைகளை உலகத்திற்கு மறைத்து மனித உரிமைகளை நிலை நிறுத்தி நாட்டில் இனவேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சரிசமமாக வாழும் நிலையை மைத்திரி உருவாக்கித் தருவார் என்பதை நம்புவோம்” என்று நீங்கள் சொல்வதன் பொருள் அடியேனின் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இலங்கையின் உண்மை நிலைகளை உலகத்திற்கு மறைத்து மனித உரிமைகளை நிலைநிறுத்தி … என்றால் என்ன பொருள்?

இனவேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சரிசமமாக வாழும் நிலையை மைத்திரி உருவாக்கித் தருவார் என்று நம்பச் சொல்கிறீர்கள். ஐயகோ, மைத்திரியே சொல்லாததை எல்லாம் நீங்களாகவே இட்டுக்கட்டினால் எப்படி? சிங்களபௌத்த அரசமைப்பின் அடிப்படையிலேயே இனவேறுபாடுகள் இல்லாமலும் சரிசமமாகவும் வாழும் நிலை தெரியாமல்தான் தந்தை செல்வாவும் தலைவர் பிரபாகரனும் விடுதலைக்குப் போராடிக் கால விரயம் செய்து விட்டார்கள் போலும்! அன்னப் பறவைக்கு வாக்குக் கேட்கத் தெரிந்தவர்களுக்குப் பாலையும் நீரையும் பிரிக்கத் தெரியவில்லையே!

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மைத்திரிதான் இறுதி வாய்ப்பு என்கிறீர்கள். அவர்தான் நம்மை உய்விக்க வந்த கடவுள் போலும்! விடுதலைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அற வலிமையையும் அரசியல் ஆற்றலையும் நீங்கள் உணரவில்லை. இந்த ஒரு தேர்தலில் எவன் வென்றாலும் எவன் தோற்றாலும் தமிழ்மக்களின் போராட்டம் உறுதியாகத் தொடரும் என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

“எஞ்சியுள்ள கோவணத்தையாவது காப்பாற்றுவோம்” என்பது உங்கள் இறுதிக் கெஞ்சல். சிறிசேனா வெற்றி பெற்றால் கோவணம் மிச்சப்படும் என்று நம்புவதற்கு என்ன அடிப்படை? ஏதாவது அசரீரிக் குரல் அப்படிச் சொன்னதா? இல்லை என்றால் சிறிசேனாவின் கடந்த கால அரசியல், இப்போதைய தேர்தல் அறிக்கை, அவரோடு சேர்ந்து நிற்கும் சந்திரிகா, ரணில், பொன்சேகா, ஜதிக ஹெல உறுமையா கும்பல் என்று அனைவரையும் ஒரு முறை உற்றுப்பார்த்து நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் — சிறிசேனாவால் உங்கள் கோவணம் காப்பாற்றப்படுமா என்று. உங்கள் கோவணத்தை பொது பல சேனாவிடம் இழப்பதா, ஜதிக ஹெல உறுமையாவிடம் இழப்பதா என்பதில்தான் ராசபட்சே வெற்றிக்கும் சிறிசேனா வெற்றிக்குமான வேறுபாடு அடங்கியுள்ளது. மற்றபடி வெங்காயத் தோல் அளவு வேறுபாடு கூட இல்லை.

“சிங்கள மக்களிடம் இனவெறியை இந்த அரசு ஏற்படுத்தி மைத்திரிக்கான ஆதரவைத் தட்டிப்பறிக்கப் பார்க்கின்றது. அதனால்தான் கூட்டமைப்பு சில விடயங்களை பகிரங்கமாக சொல்ல முடியாமல் உள்ளது” என்று இரகசியம் பேசுகின்றீர்கள். அதாவது சிங்கள இனவெறிக்கு அஞ்சி தமிழ் மக்களின் உடனடித் தேவைகளைக்கூட வெளிப்படுத்த முடியாது. அப்படியானால் அதே சிங்கள இனவெறிக்கு அஞ்சி நீதி கேட்காமல் வாய்பொத்திக் கிடக்க வேண்டியதுதான், விடுதலைக் கனவுகளை மறந்து விட வேண்டியதுதான். தமிழன் அடிமையாகவே இருக்க ஒப்புக் கொண்டு விட்டால் சிங்களனுக்கு இனவெறி வராது அல்லவா?

அறிவு சாராத வெறுப்புணர்ச்சி ஒன்றின் அடிப்படையில் மைத்திரிபாலாவை ஆதரிக்கும் முடிவு உங்களை எந்த எல்லைக்குத் தள்ளி விடுகிறது என்று காட்டவே இவ்வளவும் சொன்னேன். மற்ற படி உங்கள் நல்லெண்ணத்தின் மீது எனக்கு ஐயமில்லை.

ஒரு திருத்தம்: தமிழர்களைப் பல இடங்களில் சிறுபான்மை என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் இலங்கையை ஒரு தேசமாகக் கருதுவதால் இப்படிச் சொல்ல நேரிடுகிறது. இலங்கை என்பது சிங்கள தேசம், தமிழீழம் எனும் இரு தேசங்களை உள்ளடக்கியது. சிங்கள தேசத்தில் சிங்களர் பெரும்பான்மை, தமிழர் சிறுபான்மை என்றால், தமிழீழத்தில் தமிழர் பெரும்பான்மை, சிங்களர் சிறுபான்மை. நம் போராட்டம் சிறுபான்மை உரிமைகளுக்கான போராட்டம் அன்று, தேசிய விடுதலைக்கான போராட்டம். தேசிய விடுதலைக்கான போராட்டத்தை சிறுபான்மையினரின் போராட்டம் என்று பார்ப்பதால்தான் உங்கள் தேர்தல் முடிவு தவறாகிப் போகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

நம் அடிப்படைக் கோரிக்கைகளுக்கோ அவசரக் கோரிக்கைகளுக்கோ எள்முனையளவும் உதவாத தேர்தல் பங்கேற்புக்கு பதிலாக சிங்களப் பேரினவாதப் பதவிச் சண்டையில் தமிழர்களுக்கு அக்கறை இல்லை என்பதையும், அவர்களுக்கென்றுள்ள உரிமைக் கோரிக்கைகளையும் முன்வைத்துத் தேர்தலைப் புறக்கணிப்பதே நன்று.

ராசபட்சே வெற்றி பெற வேண்டும் என்று நானும் விரும்புவதாக நீங்கள் குற்றஞ்சாட்டலாம். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தேர்தல் நடக்கத்தான் போகிறது, இருவரில் ஒருவர் வெல்லத்தான் போகிறார் என்பதால் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெறட்டும் என்றே நானும் விரும்புகிறேன். நீங்கள் சொல்லும் காரணங்களால் அல்ல. என் காரணம் அறவே வேறு: மைத்திரிபாலா ஆட்சிக்கு வந்து உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாகும் போது நீங்களும் ததேகூ தலைமையும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவனின் நிலைக்கு ஆளாவதைப் பார்க்க வேண்டும். அப்போதாவது உங்கள் தவறுகளைக் களைந்து போராட்டப் பாதைக்குத் திரும்புவீர்கள் அல்லவா?

கடைசியாக இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் மோதி வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி ஏமாந்த தமிழகத் தமிழர்களைப் போலவே மைத்திரி வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழீழத் தமிழர்களும் ஏமாறத்தான் போகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
ஆசிரியர், தமிழ்த் தேசம்.
2014 சனவரி 5

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

January 2015
M T W T F S S
« Dec   May »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: