Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

வை.கோ மோடியை சந்தித்தார்


இன்று (23.5.2014) பகல் 1.50 மணியளவில் தில்லி குஜராத் பவனத்தில் நரேந்திர மோடி அவர்களை, வைகோ சந்தித்தார். அப்போது அந்த அறையில் அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோரும் இருந்தார்கள். வைகோவுடன் கணேசமூர்த்தியும் சென்று இருந்தார். 

 

வைகோவை வரவேற்ற மோடியிடம் வைகோ கூறியதாவது: 

 

உலகத்தின் அனைத்து ஜனநாயக நாடுகளும் உங்கள் பதவி ஏற்பு விழாவை ஆவலோடு எதிர்பார்க்கின்றன. உயர்ந்த சிகரங்களை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்வீர்கள் என்று நானும் எதிர்பார்த்து இருக்கின்றேன். ஆனால், சிங்கள அதிபர் இராஜபக்சேவுக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்தது,  பேரிடியாகத் தாக்கி, எங்கள் இதயங்களைச் சுக்கல் சுக்கலாக்கி விட்டது. 

 

நான் நேற்று தங்களுக்கு எழுதிய கடிதத்தைத் தருகிறேன். கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் என்றார். 

 

மோடி அதைப் படித்தார். ‘இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் நாங்கள் கவலையோடு தீர்வு காணவே விரும்புகிறோம். அதனையே என் பிரச்சாரக் கூட்டங்களில் சொல்லி இருககிறேன்’ என்றார். 

 

‘2002 ஏப்ரல் 30 ஆம் நாள், இந்திய நாடாளுமன்றத்தில் நான் குஜராத் நிலவரம் குறித்த விவாதத்தில் நான் ஆற்றிய உரைதான், நான் கடைசியாக நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை ஆகும். அன்று இரவு நீங்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி சொன்னீர்கள்’ என்றார் வைகோ. 

 

உடனே மோடி, நீங்கள் வடோதராவில் பேசியபோது நான் மொழிபெயர்த்தேனே என்றார். 

 

வைகோ தாம் வெளியிட்ட, ஈழத்தில் இனக்கொலை: இதயத்தில் இரத்தம் என்ற ஒளிப்படக் குறுவட்டை மோடி அவர்களிடம் தந்தார். 

 

மோடி அவர்களே, ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கையும், லண்டன்  சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட மனதைப் பதற வைக்கும் படுகொலைக் காட்சிகளும் இந்தக் குறுந்தட்டில் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள படுகொலைக் காட்சிகளைப் பார்த்தால் நீங்கள் வேதனைப்படுவீர்கள்.  இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை, பச்சிளம் பாலகர்களை குழந்தைகளை, தன் முப்படைகளையும் ஏவி, கொடூரமாகக் கொலை செய்தவன் ராஜபக்சே.

 

கடைசியாக சேனல் 4 தொலைக்காட்சி மேலும் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கின்றது.    கற்பழிக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட  இளந்தமிழ்ப் பெண்களின் உயிர் அற்ற உடல்களின் மீது சிங்கள இராணுவத்தினர் செய்த கொடுமை, இட்லரின் நாஜிப்படையினர் கூடச் செய்யாதது. இந்தக் காட்சிகளைப் பார்த்த அமெரிக்க, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் சிந்திய செய்தி ஏடுகளில் வெளியாகி இருக்கின்றது. 

 

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், 2014 மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், சிங்கள அரசும், இராணுவமும் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகள் குறித்து, சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு ஜனநாயக நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.  ஆனால் அந்தத் தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாகிÞதான் சீனாவோடு சேர்ந்து கொண்டு, இந்திய அரசு வாக்கு அளித்தபோதிலும் தீர்மானம் தோற்றுப்போனது. இறுதி வாக்கெடுப்பில்  இந்திய அரசு வெளிநடப்புச் செய்தது. 

 

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நடைபெற்ற ஒரு மாநாட்டில், ஈழத்தமிழர்கள் பிரச்சினையை நான் பேசியபோது, அனைவருமே கண்கலங்கினார்கள். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.

 

சோனியா காந்தி ஏவுதலில், அவரது கைப்பாவையாகச் செயல்பட்ட மன்மோகன்சிங் அரசு, முப்படை ஆயுதங்களையும் கொடுத்து, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக ஒரு யுத்தத்தை நடத்தியது. 

 

ஈழத்தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக்குற்றவாளிதான் சோனியா காந்தி ஆட்டுவித்த இந்திய அரசு என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டி இருக்கிறேன். 

 

‘இந்திய உதவி இல்லாவிட்டால் நாம் வெற்றி பெற்று இருக்க முடியாது’ என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கூறினான்.

 

அந்தக் கொலைகாரப் பாவியா உங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது? இதைச் சகிக்க இயலாது என்றவுடன், அருண் ஜெட்லி இடைமறித்து, ‘சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பது, இந்திய ஜனநாயகத்தை உயர்த்துவதற்கு’ என்றார். 

 

‘மிஸ்டர் ஜெட்லி அவர்களே, கொஞ்சம் பேசாமல் இருங்கள். என்னைப் பேச விடுங்கள். பாகிஸ்தான் பிரச்சினை வேறு; இலங்கைப் பிரச்சினை வேறு. பாகிÞதானில் வாழுகின்ற இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவுகள் அங்கே படுகொலை செய்யப்படவில்லை. ராஜாங்க உறவுகள், அதில் உள்ள நடைமுறைகள் இவற்றையெல்லாம் சொல்லிக் குழப்ப வேண்டாம். சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டியவனை, இந்தியாவில் புகழ்மிக்க பதவி ஏற்பு விழாவிலா பங்கேற்க வைப்பது? 

 

நாம் இலங்கைக்கு உதவாவிட்டால் பாகிஸ்தானும், சீனாவும் உதவும் என்ற நியாயம் அற்ற வாதத்தை, மன்மோகன்சிங் என்னிடம் கூறியபோது, ‘நீங்கள் என்ன உதவினாலும், இலங்கை அரசு சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும்தான் நட்பாக நடந்து கொள்ளும்; ஒருபோதும் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காது’ என்று சொன்னேன். அப்படித்தான் இலங்கை அரசு நடந்து கொண்டு வருகிறது. சீனா அங்கே வேகமாகக் கால் பதித்துக் கொண்டு இருக்கின்றது. 

 

இந்தியாவின் தெற்கு எல்லையில் நமது பூகோள அரசியல் நலன்களுக்கு எதிரான சூழ்நிலையை, மன்மோகன்சிங் அரசு ஏற்படுத்தி விட்டது. ஈழத்தமிழர்கள் வலுவாக இருந்தால், அதுதான் தென்னிந்தியாவுக்குப் பாதுகாப்பு என்பதை, வாஜ்பாய் அவர்கள் நன்றாக உணர்ந்து இருந்தார். அதனால்தான், ‘இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுக்க மாட்டோம்; பணம் கொடுத்தாலும் விற்க மாட்டோம்’ என்று அறிவித்தார்.

 

இப்பொழுதே சிங்களவர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். ‘இலங்கைத் தீவில் சிங்கள இனம் தவிர இன்னொரு இனம் கிடையாது’ என்று ராஜபக்சே கூறி இருக்கிறான். 2300 இந்துக் கோவில்களை சிங்களவர்கள் இடித்து விட்டார்கள். மீதம் இருக்கின்ற இந்துக் கோவில் வளாகங்களில் பௌத்த விகார்களைக் கட்டுகிறார்கள். தமிழர்களின் கல்லறைகளைக் கூட புல்டோசர் கொண்டு அழித்து மண்மேடாக்கி விட்டார்கள்.

 

ராஜபக்சேயின் ஏஜெண்ட்தான் சுப்பிரமணிய சுவாமி. திட்டமிட்டே உங்கள் கட்சியில்  அவரை ஊடுருவச் செய்தது ராஜபக்சேதான். ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களில் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் ஆதரவாகப் பேசி, எப்படியாவது உங்கள் அரசிலும் நுழைந்துவிடத் திட்டமிட்டு உள்ளார். ஆனால் 2009 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் கட்சி எல்லைகளைக் கடந்து, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் ஒன்றுசேர்ந்து, அழுகிய முட்டைகளை சுப்பிரமணிய சுவாமி மீது வீசினார்கள் என்பதை நீங்கள் அறிந்து இருக்க மாட்டீர்கள். 

 

மோடி அவர்களே, நீங்கள் ஒருபெரிய தலைவர். நான் சாதாரணமானவன். என் வாழ்நாளில் 28 முறை சிறை சென்று இருக்கிறேன். எதிரிகளும் குறை சொல்ல முடியாதவாறு என் நாணயத்தை, நேர்மையையும் பாதுகாத்து வருகிறேன். பொதுவாழ்வைப் பயன்படுத்தி நான் ஒரு சல்லிக்காசு சம்பாதித்தது கிடையாது. எனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு தருவதாக இரண்டு முறை வாஜ்பாய் அவர்கள் சொன்னபோதும், அதை வேண்டாம் என்றேன். நான் இலட்சியங்களுக்காக வாழ்கிறவன். 

 

இந்தியாவில் வேறு ஒரு மாநிலத்தவர்க்கு இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்திவிட்டு, அதற்குக் காரணமானவனை நீங்கள் இங்கே அழைக்க முடியுமா?  நாங்கள் தமிழர்கள் சபிக்கப்பட்ட இனம் ஆயிற்றே? அதனால்தான் இப்படிச் செய்கிறீர்கள்? என்று வைகோ கூறியவுடன், 

 

அருண் ஜெட்லி, ‘அப்படிச் சொல்லாதீர்கள். இது தமிழர்கள் பிரச்சினை அல்ல. இது தேசியப் பிரச்னினை’ என்றார். 

 

தேசியப் பிரச்சினை என்றால் செயலில் காட்டுங்கள். 578 மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றதே நாதி உண்டா? குஜராத் மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றபோது, பாகிÞதான் கடற்படை சுட்டுக் கொன்றது உண்டா? 

 

ராஜபக்சேவை அழைத்ததால் ஏழரைக்கோடித் தமிழர்களின் உள்ளமும் காயப்பட்டு இருக்கின்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் மனதுக்குள் வேதனைதான். ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டால் உங்கள் முடிவை எதிர்க்க மாட்டார்கள். 

 

காங்கிரஸ் கட்சி ஏன் ராஜபக்சேவை வரவேற்கிறது தெரியுமா? பழியை பாரதிய ஜனதா கட்சியும் பகிர்ந்து கொள்ளட்டும் என்பதற்காகத்தான். 

 

பதவி ஏற்பு விழாவில் இராஜபக்சேவை உட்கார வைப்பதால், இந்தியாவுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? உங்களுக்கு அதனால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? பழியைத்தான் சுமப்பீர்கள். 

 

ஈழத்தமிழர்களைக் காக்க, இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்க, 19 தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள். 

 

மோடி அவர்களே, இரண்டு காட்சிகளை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள். 

 

ஒன்று, ராஜபக்சே கூட்டம் குதூகலமாகக் கொண்டாடும் காட்சி. 

 

இன்னொன்று, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் வேதனை நெருப்பு எரியும் காட்சி. 

 

இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? 

 

மோடி அவர்களே, நான் இப்படி அழுத்தமாகச் சொல்லுவதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். 

 

ராஜபக்சே இந்திய மண்ணில் எங்கே கால் வைத்தாலும் எதிர்த்துப் போராடுவேன் என்று நான் ஏற்கனவே பிரகடனம் செய்து இருக்கிறேன். சாஞ்சிக்கு அவன் வந்தபோது தமிழ்நாட்டில் இருந்து படை திரட்டிக்கொண்டு சென்று அறவழியில் போராடியவன். 

 

தில்லியில் பிரதமரைச் சந்திக்க ராஜபக்சே வருவதாக அறிவித்தபோது, தில்லியில் கருப்புக் கொடிப் போராட்டம் நடத்திக் கைதானவன். எங்கள் போராட்டத்தால், ராஜபக்சேயின் தில்லி வருகை ரத்து செய்யப்பட்டது. ராஜபக்சே திருப்பதிக்குப் போனான். அங்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் எதிர்த்துப் போராடிக் கைதானார்கள். 

 

மோடிஅவர்களே, உங்களுக்குப் பக்கபலமாக, உங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை. கோடானுகோடித் தமிழர்கள் சார்பில் மன்றாடிக் கேட்கிறேன்.

 

ஒரு பிரிட்டன் குடிமகள் தவறுதலாகச் சுடப்பட்டு இறந்ததற்காக, லிபிய நாட்டுடன் தூதரக உறவுகளை உடனே துண்டித்தார் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர். அதுபோல, நீங்கள் உறுதியான முடிவுகளைத் துணிந்து எடுக்கக்கூடியவர். இந்தப் பிரச்சினையிலும அப்படி முடிவு எடுங்கள். கொலைகார ராஜபக்சே வருகையைத் தவிர்த்து விடுங்கள்.  

 

உங்கள் பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடக்கட்டும். இன்று இரவுக்குள் ஒரு நல்ல முடிவு எடுங்கள். நெருக்கடியான சூழ்நிலையிலும், இவ்வளவு நேரத்தை எனக்காக ஒதுக்கி, மனம் திறந்து பேச அனுமதித்ததற்கு நன்றி’ என்று கூறி வைகோ விடைபெற்றார். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

May 2014
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: