Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

நளினியின் பேட்டி


naLiniதமிழகத்தின் மீடியா ஒன்றிற்க்கு நளினி வழங்கியதாக கூறப்படும் பேட்டி ஒன்று கீழே இணைக்கப்படுள்ளது.அண்மையில் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் தான் ராஜீவ் கொலை வழக்கில் பொய்யான வாக்குமூலங்களை  பதிவு செய்ததாய் கூறியது இங்கு குறிப்பிடதக்கது.

கேள்வி: பேரறிவாளனின் வாக்குமூலம் முழுமையானது அல்ல. அதை நான் சரியாகப் பதிவு செய்யவில்லை என்று சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் கூறியுள்ளார். உங்களிடமும் தியாகராஜன்தான் வாக்குமூலம் பெற்றாரா?´

பதில்: பேரறிவாளனிடம் மட்டுமல்ல, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இப்போது தண்டனை அனுபவிக்கும் யாரிடமும் உண்மையாக வாக்குமூலம் வாங்கப்படவில்லை. அது நேர்மையாகப் பதிவு செய்யப்படவும் இல்லை.

கடுமையான சித்ரவதைக்கிடையில் அந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைவரும் சித்ரவதைக்கு அஞ்சித்தான் கையெழுத்துப் போட்டோம்.

தியாகராஜன் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய திகதி 1991-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8-ம் திகதி. அன்று வெளியில் பலத்த காற்றும் மழையுமாக இருந்தது. அன்று முழுவதும் நான் சித்ரவதையின் வேதனை தாங்காமல் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் மூன்று மாத கர்ப்பிணி. இரவு 8 மணிக்கு என்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அரை மணிநேரம் பரிசோதனை நடைபெற்றது. அரை மணிநேரம் கழித்து, என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள்.

அங்கு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சில காகிதங்களுடன் அமர்ந்திருந்தார். அவற்றில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன்.

இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல்தான், நான் கையெழுத்துப் போட்டேன்.

அதன் பிறகு அந்தக் காகிதத்தில் அவர்களாக நிரப்பிக் கொண்டதுதான் இன்று உலகத்தின் பார்வைக்கு என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாகக் காட்டப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் எனக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இப்படித்தான் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார். இது எதுவும் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கு விசாரணை முழுவதும் தடா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

கேள்வி: ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக நீங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லையா? இந்தப் படுகொலை பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?

பதில்: சத்தியமாகத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், காதலித்துத் திருமணம் செய்த என்னை, அதுவும் நான் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்களுடன் அனுப்பி இருப்பாரா? அதுபோல், இப்போது இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் யாருக்கும் அந்தச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.

நாங்கள் அனைவரும் இந்த வழக்கில் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள். ஆனால், குற்றவாளிகளாக மாற்றப்பட்டு இன்று தண்டனைக் கைதிகளாக இருக்கிறோம்.

அந்தச் சம்பவம் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. அவர்கள் இறந்துவிட்டனர். குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி இறந்து பல மணி நேரம் கழித்துத்தான் எனக்கே விவரம் தெரியவந்தது.

கேள்வி: சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், நளினிக்கு இதுபற்றி தெரியும் என்று வயர்லெஸ் ஆதாரம் ஒன்றைச் சொல்கிறாரே?

பதில்: வயர்லெஸ் பேச்சு சங்கேத வார்த்தைகளால் ஆனது. அந்த சங்கேத வார்த்தைகளை சி.பி.ஐ. உடைத்துப் பார்த்தனர். அதில் பேசிய குரல் சொன்ன விஷயம் என்னவென்றால், ராஜிவ் காந்தி கொலை பற்றிய விஷயம் எங்கள் மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது என்றுதான் வருகிறது.

அது சிவராஜன், சுபா, தனு ஆகிய மூவரைத்தான். என்னை அல்ல. அந்த வயர்லெஸ் தகவலில், ஆபீஸர்… பெண் நம்பிக்கையானவர் என்று என்னைப் பற்றி வருகிறது. நளினிக்குத் தெரியும் என்று எந்த இடத்திலும் அந்தக் குரல் குறிப்பிடவில்லை. ஆனால், தியாகராஜன் ஏன் இப்படி திரித்துக் கூறினார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: ´மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது பிரியங்கா – நளினி சந்திப்பு… என்ன நடந்தது அந்தச் சந்திப்பில்?´

பதில்: அன்று சிறைச்சாலை வழக்கத்துக்கு மாறான பரபரப்புடன் இருந்தது. திடீரென பரபரப்புகள் ஓய்ந்து பேரமைதி நிலவும்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த கைதிகளும் செல்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டனர்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை. என்னை மட்டும் சிறைத் துறை கண்காணிப்பாளர் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரியங்கா அமர்ந்திருந்தார். எனக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை. ஆனால், எஸ்.பி. சொன்னதும் அதிர்ச்சியும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

பிரியங்காவும் நானும் மட்டும்தான் அங்கு இருந்தோம். என் அச்சத்தை அதிகரிப்பதுபோல், பிரியங்காவின் முகம் இறுக்கமாகவும் அவரது பார்வை கோபமாகவும் இருந்தது. என்னைப் பார்த்த உடனேயே, ஒரு பொலிஸ் அதிகாரியைப்போல் என்னை மிரட்டும் தொனியில் விசாரிக்க ஆரம்பித்தார்.

தன் தந்தை கொல்லப்பட்ட அன்று நீ ஏன் அங்கு போனாய்? உனக்கு முதலிலேயே தெரியுமா? அவர்கள் உனக்கு எப்படிப் பழக்கம்? நோக்கம் என்ன? என்று வரிசையாகக் கேள்விகள் கேட்டார். அதற்கு நான் எனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறினேன். ஆனால், அந்தச் சந்திப்பில் நடந்த மற்ற விவரங்கள் மிகமிக முக்கியமானவை.

ஆனால், அவற்றை சொல்வதற்கான நேரம் இது அல்ல. காலம் நினைத்தால் அதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கும். அப்போது அந்த விவரங்களை வெளியிடுவேன்.

கேள்வி: உங்கள் விடுதலை தள்ளிப்போனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?´´

பதில்: இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களில் விடுதலையாவதற்கான வாய்ப்பு எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதற்காக முன் விடுதலைக் குழு அமைக்கப்பட்டு பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு என் விடுதலையை ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரிடம் ஒரு அறிக்கை வாங்கி, நளினி வெளியே வந்தால் ராயப்பேட்டையில்தான் தங்குவார். அது வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி-க்கள் நிறைந்த பகுதி.

அதனால், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் என்னுடைய விடுதலை தடைபட்டுள்ளது. இது அரசியல் வழக்கு என்பதால்தான், இதில் தலையிட யாரும் விரும்பவில்லை.

சிறையில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் அப்போதும் முதல்வராக இருந்தார். அவர் மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுத்து என்னுடைய குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்.

அதுபோல், என்னுடைய விடுதலை விவகாரத்திலும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த செவ்வியில் நளினி தெரிவித்துள்ளார்.

***************************************************

காலம் நீண்டாலும் சத்தியமே என்றும் வெல்லும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Information

This entry was posted on December 22, 2013 by in பெருநிலம்(தமிழகம்) and tagged , .
December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: