பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து உப்புக் காய்ச்சி இரும்புப் பூண் போட்ட தடிகளால் அடி வாங்கியவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள். அதெல்லாம் சுமார் 80, 85 ஆண்டுகளுக்கு முன்பு!
உப்புக் காய்ச்சியவர்களின் இடத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள் அமரும் அளவுக்கு நிலைமை போய்விட்ட பிறகு அரசியல் கலாச்சாரமும் மாறத்தானே செய்யும். திருச்சியில் குண்டாந்தடியோடு மாணவர்களைத் தாக்க ஓடியவர்களைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படத்தில் கதாநாயகனைத் தாக்குவதற்காக ஓடும் ஒரு கள்ளச்சாராய கோஷ்டியைப் பார்த்ததைப் போல் இருந்தது. செய்தி வாசிப்பாளர் மட்டும் அவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்று அறிவித்திருக்காவிட்டால் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன் இப்போதும்!
கொள்கையே இல்லாத ஒரு கொள்ளைக்கூட்ட அரசியல் மனோபாவத்துடன் தேசிய அளவில் இயங்கும் மிகப்பெரிய மாபியா கும்பல் – என்று காங்கிரஸைச் சொன்னால் அது மிகையல்ல! கொள்கைக்காகவோ சித்தாந்தத்துக்காகவோ நாட்டுக்காகவோ மக்களுக்காகவோ தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்கிற காங்கிரஸ் தலைவர் என்று எவரையாவது அடையாளம் காட்டுங்கள்… அபூர்வ உயிரினமாக அவரை அறிவித்துவிடலாம்.
திருச்சி நகரில் உருட்டுக்கட்டைகளோடு நிற்கும் அந்தக் கும்பலில் ஒருவராவது காந்திஜி பற்றியோ நேதாஜி பற்றியோ கேள்விப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்பே கிடையாது. இப்படி வந்து நிற்பதன் மூலம் காங்கிரஸைக் காப்பாற்றப் பிறப்பெடுத்த ரட்சகனாகக் காட்டிக்கொள்ளலாம் நாளைக்கு கட்சிக்குள் பதவியைக் கைப்பற்றுகிற ‘தகுதி’யைப் பெறலாம் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த எண்ணமும் இருக்க முடியாது.
சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் காங்கிரஸ். வென்டிலேஷனின் வைத்திருக்கிறார்கள் அதை. இயல்பாக மூச்சு விடும் நிலையை ஏற்படுத்த என்ன செய்யலாம் – என்று தானே யோசிக்கவேண்டும் ஞானதேசிகன்கள்! அதற்கு நேர்மாறாக மூச்சுத்திணறலை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களென்றால் என்ன அர்த்தம்?
‘ஒரு இனப்படுகொலைக்கு நியாயம்கேட்டு – லட்சோபலட்சம் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியிருப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை’ என்று 2 நாட்களுக்குமுன் மருத்துவமனையில் சந்தித்தபோது நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி அவர்கள். ஒரு மெய்யான படைப்பாளியால் நாட்டு நடப்பை மருத்துவமனையிலிருந்தே உணரமுடிகிறது. பொய்த் தேவு – போல சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்திருக்கிற ஞானதேசிகனால் அதை உணர முடியவில்லை. மாணவர்கள் என்கிற போர்வையில் தேச விரோத சக்திகள் ஊடுருவி இருக்கின்றனவாம்! பேசுகிறது அந்தப் பரப்பிரம்மம்.
மனசாட்சி – என்கிற சமாசாரமே ஞானதேசிகனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸில் அப்படியொன்று இருக்கிற யாராவது இருந்தால் அவர்களுக்காக ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு – ஒரு பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது. (அந்தப் புகாரே ஜோடிக்கப்பட்டது – என்பது வேறு விஷயம்.) ஒரு 9 வோல்ட் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாகக் கூறி பேரறிவாளனைத் தூக்கில் போட முயற்சிக்கிறார்கள். ஆயுதங்களையும், ரேடார்களையும், விமானங்களையும் – வாரிவழங்கி, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளைக் கொன்று அழிக்க உங்களது காங்கிரஸ் அரசு இலங்கையைத் தூண்டியதே… அதற்காக யார் யாரைத் தூக்கில் போடவேண்டும் என்று கருதுகிறீர்கள்?
மன்மோகன்சிங் அரசுதான் ஆயுதம் கொடுத்தது என்றாலும் சோனியாகாந்திக்கோ பிரணாப் முகர்ஜிக்கோ அந்தோணிக்கோ சிதம்பரத்துக்கோ கிருஷ்ணாவுக்கோ கூட தெரியாமல் ரகசியமாகவா கொடுத்திருப்பார்கள்! இவர்களில் யார் யார் குற்றவாளிகள் யார் யாருக்கு என்னென்ன தண்டனை கொடுக்கலாம்? சொல்லுங்கள்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கினால், ஒரு மாற்றுக் கேள்வி இருக்கிறது உங்களுக்கு!
கேரள மீனவர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் இத்தாலிக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்ததே இந்தியா.. அதற்குப் பிறகுதானே இத்தாலி குற்றவாளிகள் இருவரும் இந்தியா திரும்பினர்! இங்கே இந்த மண்ணின் மைந்தர்களான நமது மீனவச் சொந்தங்கள் அன்றாடம் உயிரிழப்புக்கு ஆளாகின்றனரே இலங்கை கடற்படையால்! ஆயிரம் மீனவர்கள் கொல்லப்பட்டபின்பும் ஒரே ஒரு கொலையில் கூட ஒரே ஒரு இலங்கை கொலைகாரனைக்கூட பிடிக்கமுடியவில்லையே உங்கள் கடற்படையால்! ஏன்? ஆயிரம் பேரில் ஒருவர்கூட கேரள மீனவர் இல்லை அனைவருமே தமிழர்கள் என்பதாலா!
ஆயிரம் மீனவர்களின் உயிர்களுக்கு உங்கள் ஆட்சியில் நீதிகிடைக்கவில்லை என்கிற கோபத்தில் தமிழக மீனவர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் – ‘தமிழக மீனவர்கள் அத்துமீறுவதால்தான் இலங்கை கடற்படை தாக்குகிறது…. இரட்டை மடி வலையைப் பயன்படுத்துவதால்தான் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்’ என்றெல்லாம் திமிராகப் பேசுகிற ஞானதேசிகனின் சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கவேண்டாமா நீங்கள்? இதைச் செய்யாமல் வேறு எதைச் செய்து கட்சியை வளர்க்கப் போகிறீர்கள்?
மாணவர்கள் – என்றால் தேச விரோதிகள் மீனவர்கள் – என்றால் அத்துமீறுகிறவர்கள் – என்று கோனார் நோட்ஸ் போடுகிற கோயபல்ஸ்களைக் கண்டும் காணாமலும் இருந்துவிடக் கூடாது எவரும்! காங்கிரஸ் கொடியை மாணவர்கள் கொளுத்தும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியிருப்பது மனத்தளவில் ஊனதேசிகர்களாக இருப்பவர்களின் உளறல்கள் தான்! ஓராயிரம் மீனவச் சொந்தங்களின் உயிரிழப்பைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இலங்கையின் ஏஜென்ட் போலவே பேசும் இவர்களுக்குப் பாடம் புகட்டுவதில் மாணவத் தம்பிகளைப் போல் மீனவச் சொந்தங்களும் உண்மையோடும் உணர்வோடும் முன்நிற்க வேண்டும்.
ஞானத்துக்கு நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை – என்று பிரதமரின் அலுவலகத்துக்கு உள்ளிருந்தே குரல் கொடுக்கிறார் நாராயணசாமி. தனித் தமிழ் ஈழம் பற்றி பொதுவாக்கெடுப்பெல்லாம் நடத்தக் கூடாதாம்! (உதயகுமாரைக் கைது செய்யலாமா வேண்டாமா – என்று பொதுவாக்கெடுப்பு நடத்தலாமா நா.சா.?)
தனக்குத்தானே குழிபறித்து தன்னைத்தானே அடக்கம் செய்துகொள்ள தலைகீழாய் நிற்கிறது காங்கிரஸ். பானை உடைத்து கொள்ளிவைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஞானதேசிகன்களும் நாராயணசாமிகளும்! இவ்வளவுக்குப் பிறகும் காங்கிரஸை எப்படியாவது காப்பாற்ற நரமாமிச நிபுணன் மகிந்த ராஜபட்சேவைக் கொண்டுவந்து களத்தில் இறக்குகிறார்கள்.
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள் – என்று மற்ற நாடுகளுக்கு ராஜபட்சே சவால் விடுவது வேறு விஷயம். இந்தியாவுக்கும் சேர்த்து சவால் விடுகிறானே இந்தியாவையும் எச்சரிக்கிறானே… அதுதான் நம்மை வியக்கவைக்கிறது. ஜெனிவா தீர்மானத்தை நீர்த்துப் போகவைத்தது இந்தியாதான் – என்பதை வெள்ளை மாளிகை அம்பலப்படுத்தியபிறகு இந்தியாவுக்கு இலங்கை நன்றியும் சொன்னபிறகு எதற்காக இந்தியாவுக்கு அவன் எச்சரிக்கை விடவேண்டும்?
ஜெனிவா மர்மநாவலின் முதல் அத்தியாயத்தில் இலங்கை சொன்னபடியெல்லாம் அந்தர்பல்டி அடித்து அசத்தியது இந்தியா. இரண்டாவது அத்தியாயத்தில் இந்தியா சொல்கிறபடியெல்லாம் பேசி மெய்சிலிர்க்க வைக்கிறான் மகிந்த. அந்த பௌத்த மிருகம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்குமாம்… உடனேயே இங்கேயுள்ள ஞானப்பழங்கள் எல்லோரும் – ‘ஜெனிவாவில் இலங்கையின் மென்னியைப் பிடித்துத் திருகியதால்தான் இந்தியா மீது பாய்கிறான் ராஜபட்சே’ என்று வசனம் பேசுவார்களாம்… தேமேன்னு கிடந்த பாரததேசம் நமக்காகப் பேசியதால்தானே மகிந்தன் பாய்கிறான் – என்று நாமெல்லாம் உச்சுக் கொட்டுவோமாம்!
மகிந்தன் எப்படியெல்லாம் எச்சரிக்க வேண்டும் என்று வசனம் எழுதிக் கொடுத்துவிட்டு அவன் வாயிலிருந்து ஒரு பீத்தல் காற்று புறப்பட்டவுடன் ‘சபாஷ்! எச்சரிக்கைன்னா இதாண்டா’ என்று பாராட்டக் காத்திருக்கிறது இந்தியா. இந்த சீன் பார்த்து உருகிவிட திருச்சி குண்டர்களின் கையிலிருந்த உருட்டுக்கட்டைகளா நாம்!
இதற்கிடையே எந்த அரசியல் ஆதாயமும் எதிர்பார்க்காமல் போராடும் தமிழக மாணவச் செல்வங்கள் சிங்களர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். அவர்கள் குரலை தமிழக அரசும் எதிரொலிக்க ஒருவழியாக சென்னையில் நடக்கும் எந்தப் போட்டியிலும் சிங்களர்கள் அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
மாணவர் சக்திக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை சிலருக்கு! விளையாட்டை விளையாட்டாகத் தான் பார்க்கவேண்டும் அரசியலாக்கக் கூடாது – என்கிறார்கள் அந்த அறிவுஜீவிகள். இவர்களில் எவரது சகோதரியும் இலங்கையில் கற்பழிக்கப்படவோ இவர்களில் எவரது குழந்தையும் இலங்கையில் கொல்லப்படவோ இல்லை என்பது இவர்கள் பேசுவதிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது. அரசியல் வேறு இனப்படுகொலைக்காக நீதி கேட்பது வேறு என்பதை இந்த அறிவுஜீவிகள் புரிந்துகொள்ளாதவரை இவர்கள் அறிவைப் பயன்படுத்தி எந்தச் சமூகமும் உருப்பட வாய்ப்பேயில்லை.
ஐ.பி.எல்.விஷயத்தில் கொதித்து எழுந்து பேசியிருக்கும் இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க பற்றி நாம் நிச்சயம் தெரிந்துகொண்டாக வேண்டும். நடந்த இனப்படுகொலையின் இன்னொரு சூத்திரதாரியான சரத் பொன்சேகாவை அதிபர் பதவிக்கு முன்நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் அந்த மனிதர். சென்னையில் விளையாட இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் ஆடுவோரை அனுமதிக்காதது அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் – என்கிறார் பகிரங்கமாகவே ஒரு இனப்படுகொலையாளியைத் தூக்கிப் பிடித்த ரணதுங்க.
இப்படி அவமதிக்கும் ஒரு போட்டியிலிருந்து வெளியேறிவிடுவதுதான் தன்மானம் – என்பது ரணதுங்கவின் வாதம். ரணதுங்கவின் உடலில் ஓடுகிற சிங்கள ரத்தம் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் உடலிலும் ஓடினால் அவர் சொல்வதைக் கேட்டு அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஒருவேளை அவர்கள் உடலில் ஓடுவது வேறு ஏதாகவாவது இருந்தால் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் காசுக்காக அவர்கள் ஆடக்கூடும். அவர்கள் உடலில் ஓடுவது எது என்பதை அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
‘எங்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தமிழர்களுக்கு என்ன செய்துவிட்டார்கள்? அங்கே போர் முடிந்துவிட்டது தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என்கிறார் இனப்படுகொலை செய்த ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தன்னை அறிவித்துக்கொள்ள வெட்கப்படாத ரணதுங்க.
இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்களோ நாடாளுமன்ற உறுப்பினரான ரணதுங்கவோ அப்பாவித் தமிழ் மக்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டபோது என்ன கிழித்தார்கள்? ‘தன்னுடைய சொந்த நாட்டின் மக்கள் மீதே விமானத்திலிருந்து குண்டுபோட்டு கொல்கிற நாடு என்னுடைய இலங்கை’ என்று சொன்னதற்காக கொழும்பு நகரில் நடுத்தெருவில் கோதபாயவின் கூலிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டாரே பத்திரிகையாளர் லசந்த – அவரைப் போல துணிவுடனும் தெளிவுடனும் ஒருவார்த்தை பேசியிருப்பார்களா? கொழும்பில் இருந்தால் கோதபாயவுக்கு பயந்து வாய் உட்பட அத்தனையையும் பொத்திக்கொண்டிருக்கும் இந்த ஜென்மங்களுக்கு இந்தியா வந்ததும் வாய் கிழிகிறதே… எப்படி?
தமிழர்கள் எங்கள் சகோதரர்கள் அவர்களைக் கொல்லாதே – என்று குரல் கொடுக்கும் ஆண்மை இருந்ததா ரணதுங்கவுக்கும் மற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும்! இப்போதும் அங்கே பெண்களும் இளைஞர்களும் பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை – என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் சொல்வது அவர்கள் காதுகளில் விழவேயில்லையா? எவ்வளவு திமிர் இருந்தால் – தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் – என்று கூசாமல் புளுகமுடியும் ரணதுங்க என்கிற அந்த சிங்கள எம்.பி.யால்!
எங்கள் பிள்ளை பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதத்தைப் புகைப்படங்கள் மூலம் பார்த்துக் கொதித்துப் போய் நிற்கிறார்கள் தமிழக மாணவர்கள். ஒரு 12 வயதுக் குழந்தையைத் திட்டமிட்டுக் கொன்றிருக்கும் தன் நாட்டு மிருகங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் ஆண்மை இல்லாத ரணதுங்க ‘தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டது’ என்கிறான் பேடித்தனமாக! இப்படிப்பட்ட இழிபிறவிகளை இப்போது மட்டுமல்ல இனி எந்தக் காலத்திலும் தமிழ் நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க நாம் அனுமதிக்கக்கூடாது!
இப்போதுள்ள நிலையில் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.பி.எல். விஷயத்திலும் பொதுவாக்கெடுப்பு தொடர்பாகவும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் மாணவர் போராட்டங்கள் குறித்த முதல்வரின் வேண்டுகோள் குறித்து நாம் விவாதித்தாக வேண்டும்.
புகழேந்தி தங்கராஜ்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி